Saturday, November 13, 2010

நான் செய்தது தவறா ?கொந்தளிக்கும் மத்திய அமைச்சர் ஆ.ராசா


தெளிவான சொற்கள்.. அழுத்தமான வாதங்கள்.. தடுமாற்றமில்லாத குரல்.. இவைதான் ஆ.ராசாவிடம் நக்கீரன் பேசியபோது வெளிப்பட்டவை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகவும், பிரதமர் உள்பட நிதியமைச்சகம் -சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் பரிந்துரைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதால் அரசுக்கு 1லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிப்பதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விரிவாகவே நம்மிடம் பேசினார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா.

""மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை(சி.ஏ.ஜி) என்பது ஒரு நிறுவனம். அது தனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, அறிக்கையின் சாராம்சம் என்ன என்பதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத்ராய் வெளியிடவில்லை. அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுமில்லை. சில ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் மட்டும் உள்நோக்கத்துடன் இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற இந்த சர்ச்சைகள் குறித்து நான் பல முறை விளக்கமளித்திருந்தாலும் இப்போது சி.ஏ.ஜி.யை முன்வைத்து எழுப்பப்படும் குற்றச் சாட்டுகளுக்கு என் பதிலை அளிக்க விரும்புகிறேன்.

இந்தியாவில் தேசியத் தகவல் தொழில்நுட்பக் கொள்கை 1994-ம் ஆண்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. அந்த ஏலத்தில் 3 நிறுவனங்கள் கலந்துகொண்டு அலைக்கற்றைகளைப் பெற்றன. அப்போது, ஒரு செல்போன் அழைப் புக்கான கட்டணம் (அவுட்கோயிங்) 16 ரூபாயாக இருந்தது. இந் நிலையில், ஏலம் எடுத்த 3 கம்பெனிகளும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. அதாவது, தங்களுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏலத்தொகையைக் கட்ட முடியாது என்றும், அதனை உரிய முறையில் சரி பண்ண வேண்டுமென்றும் கோரின. மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டும் இதை சரி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும்படியும் சொன்னது.

அதன்படி, 1999-ம் ஆண்டில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப் பட்டது. அதில், "ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடவேண்டாம். ஸ்பெக்ட்ரம் பெறும் நிறுவனங் களிடம் லாபத்தில் பங்கு என நிர்ணயிக்கலாம். அதுதான் அரசுக்கு அதிக வருவாய் தரும்' என்று மத்திய அரசு தனது கொள்கையை வகுத்தது. இதனடிப்படையில்தான் இந்தத்துறைக்கு பொறுப்பு வகித்த பா.ஜ.க அமைச்சர்கள் பிரமோத்மகாஜன், அருண்ஷோரி ஆகியோரும் அதன்பின் பொறுப்பு வகித்த தயாநிதிமாறனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்கள். இதுதான் இப்போதும் தொடர்கிறது.

2007-ம் ஆண்டு நான் இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றபோது, எஸ்.டி.டி. அவுட்கோயிங் கட்டணம் 2 ரூபாயாகவும், உள்ளூர் அழைப்புக்கான கட்டணம் 1 ரூபாய் 60 பைசாவாகவும் இருந்தது. அப்போது இருந்த செல்போன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 33 கோடி. வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கட்டணம் குறையவும் என்ன செய்யலாம் என ஆய்வும் ஆலோசனையும் நடத்தியதில் பயன்படுத்தப்படாமல் நிறைய அளவில் ஸ்பெக்ட்ரம் இருப்பதையும், அதைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகு வார்கள். அதன் மூலம் அரசுக்கு வருமானம் கூடும். அதேநேரத்தில், அதிகப் பயன்பாட்டின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறையும் என்பதை அறிந்தோம்.

இதையடுத்து, தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) இது குறித்து பரிசீலித்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்குப் பரிந்துரைத்தது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், தங்களின் ஏகபோக வியாபாரம் பாதிப்படையும் என நினைத்த சில நிறுவனங்கள் இதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், பயன்பாட் டாளர்கள் குறைந்த கட்டணத்தில் செல்போன் வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டதால், புதிய நிறு வனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 ரூபாயாக இருந்த எஸ்.டி.டி கட்டணம் இப்போது வெறும் 40 பைசா. 1 ரூபாய் 60 பைசாவாக இருந்த உள்ளூர் அழைப்பு இப்போது 25 பைசாதான் -அதுவும் 10 பைசாவாகக் குறையப்போகிறது. இந்தியாவில் இப்போது தொலைபேசி, செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 72 கோடியே 50 லட்சம் பேர். பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து, வாடிக்கையாள ருக்கான கட்டணத்தைக் குறையச் செய்து, அரசுக்கான வருமானத்தை கூடுதலாக்கியதுதான் நான் செய்த தவறு. இதுதான் அநியாயம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இதைத்தான் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள்.

2007-ல் செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை 2001-ம் ஆண்டுக்கான கட்டணத்திலேயே கொடுத்ததாகவும் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கட்டணம் நிர்ணயிப்பது எங்கள் துறை அல்ல. அது ட்ராய் என்கிற தன்னாட்சி பெற்ற நிறுவனத்தின் பணி. 2007ல் ட்ராய் வகுத்துக்கொடுத்த கொள்கையில் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. 2001-ம் ஆண்டுக்கான கட்டணமே நீடித்தது. அதன்படி ஒதுக்கினோம். இதில் எங்கள் தவறு எங்கே இருக்கிறது?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதமும், அவர் எழுதிய பதிலும் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. இந்த ஒதுக்கீடு தவறு என்றோ இதை நிறுத்திவையுங்கள் என்றோ அவர் ஒரு வரிகூட குறிப் பிடவில்லை. ஒருசில நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்திலிருந்த செல்போன் சேவை இன்று இந்தியாவின் குக்கிரா மம் வரைக்கும் கிடைக்கச் செய் திருப்பதுதான் என் தவறு. ஒரு வீட்டை விற்றால் ஒரு முறைதான் பணம் கிடைக் கும். அதையே வாடகைக்கோ குத்தகைக் கோ விட்டால், குறிப்பிட்ட கால இடை வெளியில் தொடர்ந்து பணம் கிடைக்கும். அதுபோலத்தான் ஸ்பெக்ட்ரத்தை ஏல முறைக்குப் பதில் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அரசுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கச் செய்திருக்கிறோம். இது தவறா? இது அநியாயமா?

சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து எதுவும் முடிவெடுக்க முடியாது என்பதை சட்டம் தெளிவாகக் குறிப்பிடுவதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். செல் போனை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு வசதியும் கட்டணக்குறைப்பு மூலமாக லாபமும் கிடைத்துள்ளது. மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது ஏற்படும் இழப்பை அரசு ஏற்றுக்கொள்வது வழக்கம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மக்களுக்கும் லாபம் கிடைத்துள்ளது. அரசுக்கும் நிரந்தர வருமானம் வருகிறது. இதுதான் நான் செய்த தவறு என உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள்'' -என்றார் அமைச்சர் ஆ.ராசா விளக்கமாகவே.

-டெல்லியிலிருந்து சிந்துஜா
நன்றி:நக்கீரன் 13-10-2010

No comments:

Post a Comment