Thursday, October 7, 2010

பிள்ளை வளர்ப்பும் தென்னை வளர்ப்பும் வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புற வாய்ப்பில்லாதவர்கள் என்று பிள்ளைகளைப்பற்றி வள்ளுவர் தம் குறளில் எழுதினார்!

இன்றும் குழந்தைகளோடு நாம் பழகும்போதும், அவர்தம் மழலை அமுதை நாம் உண்ணும்போதும் பிறகு அதுபற்றி எண்ணும்போதும் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

தஞ்சை வல்லத்தில் குழந்தைகளுடன் நான்கு நாள்கள் இருந்தபோது எத்துணை இன்பம்! எவ்வளவு மகிழ்ச்சி!! அடடா எழுத்தில் வடித்திட முடியாதே!

ஆனால், தற்போதுள்ள சமுதாயச் சூழலில் படிப்பு வளர வளர பாசம் குறைந்து வருவதோடு - பெற்றோர்களிடம்கூட பெரியவர்களானவுடன் உறிஞ்ச வேண்டியவைகளை உறிஞ்சிக்கொண்டு, பிறகு தூக்கி வீசிடும் நன்றி (கெட்ட) நாயகர்களாக, நாயகிகளாக வாழும் அவலம் நம் குடும்பங்களில் அன்றாடக் காட்சிகளாக அரங்கேறிக் கொண்டே இருக்கிறது!

தென்னையை வைத்தால் இளநீறு

பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு!

என்பது வெறும் திரைப்படப் பாடல் அல்ல!

அங்கிங்கெனாதபடி எங்கெங்கு காணினும் அவலக் காட்சிகள்!

ஆசையோடு, வாரி அணைத்தவர்களுக்குக் கிடைக்கும் கடைசி காலப் பரிசு, அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாகி விடுவதோடு நில்லாமல், அவர்கள் மனம் சிதறு தேங்காய்போல சிதறிச் சில்லுகளாக நொறுங்கிவிடும் கோரக் காட்சிகளை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்!

சொல்லி அழக்கூட முடியாத சோகப் படலத்தின் உச்சத்தில் எரிதழலாய் மாற்றப்பட்டு விடுகின்றனர்!

பெரிய நிலைக்குத் தம் பிள்ளைகள் வரவேண்டும் என்பதற்காக அந்தப் பெற்றோர்கள் செய்த அரும் பெரும் தியாகங்கள், பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போகின்றன ஒரு நொடிப் பொழுதில்!

மனிதம் ஆள வேண்டிய இளம் வாலிப உள்ளங்களில் மமதையும், மடை திறந்த வெள்ளம் போன்ற சுயநலமும் குடியேறி கோலோச்சி வரும் கொடுமையால் பாதிக்கப்பட்ட முதியோர், ஏன்தான் வாழ்கிறோம்; எப்போது நமக்கு முடிவு வருமோ என்று நொந்து நூலாகி வெந்து சாம்பல் நிலைக்கு சாய்ந்து கொள்ளுகின்றனர்!

...காடுவரை பிள்ளை என்பதெல்லாம் அந்தக் காலம்; நம்மை (சுடு) காட்டுக்கு அனுப்ப முந்துறும் பிள்ளைகளே - முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாள் கழித்துப் பெற்ற பிள்ளைகள்!

எனவே நல்ல வாழ்வியல் - பகுத்தறிவு சிந்தனையாளர்களே! உங்கள் குடும்பத்தவரை நம்புவதைவிட, நெருக்கமான உயிர்காக்கும் தோழர்கள், தோழிகளோடு வாழுங்கள் - உங்கள் வாழ்விணையர்களையே பெரிதும் நம்புங்கள்.

இறுதிவரை உங்கள் கால்களில் நீங்கள் நில்லுங்கள் - உங்களது பிள்ளைப் பாசம், பரிவுக்கும்கூட உச்சவரம்பு தேவை- இந்தப் புது யுகத்தில் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற முன்னேற்பாட்டுடன் முதுமையை சந்தியுங்கள்!

தொண்டறம் மூலம் மகிழ்ச்சியை அடையுங்கள். ஊர்நலம், உலக நலம் ஓம்புவது உங்கள் வழியானால், உங்களைப் பாதுகாக்க, உங்கள்மீது பாசம் கொட்ட கோடிக் கைகள் உண்டு என்பதை மறவாதீர்கள்!

நல்ல நண்பர்கள் - கைம்மாறு கருதாத நட்பாளர்கள் - உடுக்கை இழந்தவன் கைபோல உதவுவதற்கு எப்போதும் முன்வருபவர்கள்; அவர்களை அடையாளம் கண்டு அபயம் தேடத் தவறாதீர்கள்!

1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி தமிழோவியா அய்யா..!தொடர்பு கொள்கிறேன்..!

    ReplyDelete