இலங்கை அதிபர் ராஜபக்சே ஆத்திரத்தை, வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சுயமதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நேற்று சிறப்புரை நிகழ்த்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலண்டனில் வாழும் தமிழர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
தமிழர்களை முற்றாகக் கொன்று குவித்த பாசிஸ்ட் ராஜபக்சேவுக்கு எந்த விதத்திலாவது எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று இலண்டனில் வாழும் தமிழர் கள் நினைத்தது மிகவும் சரியானதாகும்.
ராஜபக்சே ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேசுவது நிறுத்தப்பட்டாலும், அவர் எங்கு தங்கி யிருந்தாலும் எங்களின் எதிர்ப்பு நடவடிக்கை நடந்தே தீரும் என்பதிலே இலண்டன் வாழ் தமிழர்கள் மிகவும் உறுதியாகவே இருந்தனர்.
இலண்டன் விமான நிலையத்தில் ராஜபக்சே வந்து இறங்கிய போதே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரங்கேறி விட்டது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் ராஜபக்சே பேசும்போதேகூட, அதை எதிர்த்து ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வாயிலில் ஆர்ப்பாட் டத்தை நடத்திட தமிழர் அமைப்புக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்ததுதான் அது.
ஜனநாயகநாடு என்று மார்தட்டும் இந்தியாவில் இதனை எதிர்பார்க்க முடியுமா? அனுமதியை கண்டிப் பாகக் கொடுத்திருக்கவே மாட்டார்கள்.
பேசுவதற்கு ராஜபக்சேவுக்கு உரிமை உண்டு என்றால், அவர் செய்த இனப்படுகொலைக்காக மனித உரிமை அடிப்படையில் கண்டிப்பதற்கும் நிச்சயம் உரிமை உண்டே...!
போர்க்குற்றவாளியான ராஜபக்சே இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற ஒரு கருத்து இருந்தது. இந்த அடிப்படையில் இதற்கு முன் ஒரு முறை தனது பயணத்தை இலங்கை அதிபர் ரத்து செய்துவிட்டார். இப்பொழுதுகூட இங்கிலாந்து இராணிக்கு, தான் கைது செய்யப்படக் கூடாது; தாங்கள் காருண்யம் செலுத்துங்கள் என்று கடிதம் எழுதி, இராணியாரிட மிருந்து பதில் வந்தபிறகு துணிந்து இலண்டன் வந்துள்ளார் இந்த வீராதி வீரர் சூராதி சூரர்!
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் ராஜபக்சே பேசுவதாகயிருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதற்குச் சொல்லப்பட்ட காரணம் மிக முக்கியமானது. எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்று தெரியவருவதால், கூட்டத்தை நடத்துவது பாதுகாப்பாக இருக்காது என்று கருதியதால் ரத்து செய்யப்பட்டது என்று கூறியிருப்பது தமிழர்களின் உணர்வுக்குக் கிடைத்த சிறப்பான வெற்றியாகும்.
தன்னை யாரும் அசைக்க முடியாது என்று ஆணவத்தில் கொக்கரித்த ராஜபக்சேவுக்குக் கிடைத்த சவுக்கடி இது.
இன்னொரு பக்கத்தில் போர்க்குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
இலங்கையில் ஈழத்தமிழர்களை அழித்ததில் ராஜபக்சே வெற்றி பெற்று இருக்கலாம், மீண்டும் இலங்கையின் அதிபராக முடிசூடியும் இருக்கலாம்.
அவற்றையெல்லாம், விட இன்னொரு நாட்டில் ஏற்கெனவே இசைவு அளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு, தமிழர் களின் தன்மானக் குரல் வெற்றி பெற்றிருக்கின்றது.
அந்த வகையில், ஒரு நாட்டின் அதிபர் கடுமையான தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இத்தகைய கொடூரமான பேர்வழிக்குத்தான் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அன்பழைப்பைக் கொடுத்து, உச்சிக்கு முத்தம் கொடுக்கிறது.
உலக நாடுகள் இந்தியாவைப் பற்றி என்ன கருதும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மனித உரிமைகள் பற்றிப் பேசும் தகுதி பற்றி மற்ற மற்ற நாடுகள் விமர்சிக்காதா?
அதுவும் மற்ற நாடுகளைவிட ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவுக்குக் கூடுதல் பொறுப்பு உண்டே. இந்தியாவின் தென்கோடியில் வாழும் தமிழர் களின் தொப்புள்கொடி உறவுகொண்ட மக்களாயிற்றே அவர்கள். அத்தகையவர்களைப் பாதுகாக்கும் கடமை உணர்வு இந்தியாவுக்கு இருக்கவில்லையா?
தார்மீக ரீதியில் இந்தியாவின் மீதான மதிப்பீடு-ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு நடந்து கொண்ட முறையின் மூலம் தாழ்ந்து போய் விட்டது என்பதே உண்மை.
இங்கிலாந்து நாடு உலகில் பல நாடுகளை அடிமைப் படுத்தி ஆண்ட நாடு-அத்தகைய நாடே மனித உரிமை களை மதித்து அதற்கு முன்னுரிமை கொடுக்கிறபோது, அடிமைப்பட்டு மீண்டநாடு, தனது பழைய வலியையும், காயங்களையும் எண்ணிப் பார்த்தாவது குற்றவாளிகள் விடயத்தில் சரியான அணுகுமுறையைப் பின்பற்றி இருக்க வேண்டாமா?
இலண்டன் நிகழ்வு ராஜபக்சேவுக்கு சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவ வேண்டும்-இந்தியாவும் அது போலவே நடந்து கொண்டால் வரவேற்கத்தக்கதாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101203/news06.html
No comments:
Post a Comment